புலனடக்கத்தின் பெருமையை திருக்குறளில் 24-வது குறட்பாவில் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆனால் திருமூலரோ திருமந்திரத்தில் 'அஞ்சும் அடக்கடக் கென்பார் அறிவிலார்…' என்று கூறுகிறார், இதில் எது சரி? யார் கூறியது சரி? விளக்குவீர்களா?

ஐம்புலன்களையும் ஒருவன் அடக்க முடிந்தால் அவனுக்கு அது ஏழு பிறப்பிலும் அரண் போல அமையும் என்பது வள்ளுவர் சொன்னது.

அவருக்கு முன்னதாக பல காலத்துக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொன்னது ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வது கடினம் ஆனால் அதே ஐம்புலன்களை இறைவன் பால் செலுத்தினால் மெய்யறிவு பெறலாம் இறைவனை அடையலாம் என்பது ஆகும்.

திருவள்ளுவர் சொன்னது சாமானிய மனிதருக்கான வாழ்வியல். (இவ்வாறு நடந்தால் நீ பாதுகாப்பாக உணரலாம் என்பதாகும். )

திருமூலர் சொன்னது மெய்ஞானம் பெறுவதற்கான வழி.(முழுவதுமாக உன்னால் அடக்க முடியாது ஆனால் இறைவனை நோக்கி ஐம்புலன்களை திருப்புவதன் மூலம் நீ மெய்ஞானம் பெறுவாய்)

இறை பக்தியின் மூலம் என்ன சாதிக்க முடியும் என்று சொன்னவர் திருமூலர்.

ஐம்புலன்களை அடக்க வேண்டியது அவசியத்தை மட்டுமே சொன்னவர் சாமானியனும் உணர்ந்து கொள்ளும் விதத்தில் சுய கட்டுப்பாடு என்பதை பற்றி எடுத்துரைத்தார்.

முயற்சி செய்தால் முடியும் என்று திருவள்ளுவர் தன்னம்பிக்கையைக் கொடுக்கிறார்.

திருமூலரோ ஐம்புலன்களை கட்டுப்படுத்த முடியாத சாமானிய மனிதன் இறை பக்தியின் மூலமே நல்வாழ்வு பெற முடியும் என்று அழைத்தார்.

இறை பக்தியில் ஊறி திளைத்தவர் திருமூலர். மெய்ஞானம் பெற்றவர். சைவ சித்தாந்தத்தை எடுத்துரைத்தவர்.

திருவள்ளுவர் நடைமுறை வாழ்க்கையில் மானுடனின் நல்லொழுக்கம் பற்றி உரைக்கிறார். இறைவன் அருளை வேண்டினாலும் இறை மார்க்கத்தில் சாமானியனை திசை திருப்புவது அவருடைய நோக்கம் கிடையாது.

அறம் பொருள் இன்பம் இவற்றை ஆராய்ந்தவர் வள்ளுவப் பெருந்தகை.

எனவே தான் உலகப் பொதுமறையானது திருக்குறள்.

கருத்துகள்