இறந்தவர்களின் உடல்

இறந்தவர்களின் உடலை எத்தனை நாட்களுக்குப் பிறகு புதைப்பது ஏற்புடையது? ராணி எலிசபெத் இறந்து பல நாட்கள் உடலை வெளியே வைத்திருந்து பிறகு புதைத்தது சரியா?

ஐக்கிய பேரரசின் மறைந்த அரசி இரண்டாவது எலிசபெத் அவர்கள் செப்டம்பர் எட்டாம் தேதி 2022 இல் மரணம் அடைந்தார். 19.09.2022 ல் அதாவது 12 ஆவது நாள் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரசி மரணமடைந்த உடன் முறைப்படி லண்டனின் பாலம் வீழ்ந்தது என்று பிரதமர் லிஸ் ட்ரஸ் கு அறிவித்து அவர் மௌன அஞ்சலி செலுத்தி அதன் பிறகு ஆபரேஷன் லண்டன் ஆரம்பித்தது.

அடுத்த நாளே புதியமன்னர் அறிவிக்கப்பட வேண்டும். அதை புதிய மன்னர் உறுதி செய்ய வேண்டும்.

பாராளுமன்ற நடவடிக்கைகள் யாவும் பத்து நாட்களுக்கு நிறுத்தப்பட்டு அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு ராணுவ நடவடிக்கைகள் திட்டமிடப்பட வேண்டும்.

ஸ்காட்லாந்து பல்மோரலில் மரணம் அடைந்த அரசியாரின் உடலை அங்குள்ள வழிபாட்டு முறைகளை முறைப்படி செய்த பிறகு சாலை வழியாக வான் வழியாக லண்டனுக்கு திரும்ப கொண்டு வந்தார்கள்.

அரண்மனையில் இருந்து வெஸ்ட் மினிஸ்டர் ஆபி கொண்டு செல்லப்பட்டது

உலக நாடுகளில் இருந்து பல்வேறு தலைவர்கள் குடும்பத்தினர் உறவுகள் நண்பர்கள் என்று அனைவரும் வந்து பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காகவும் வெஸ்ட் மினிஸ்டர் மன்றத்தில் வைக்கப்பட்டது.

அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு அரசியின் இறுதி ஊர்வலம் இரு விதமாக மேற்கொள்ளப்பட்டது மெதுவாக ஒன்று செல்லும் விதமாகவும் விரைந்து செல்லும் விதமாகவும் ராணுவ வண்டியிலும்(gun carriage) பிரத்தியேக வாகனத்திலும்வின்சர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உள்ள பிரத்தியேக தேவாலயத்தில் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரச குடும்பத்தினர் இறந்தால் அவர்கள் உடல் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும்.

உடல் சிதையாமல் இருப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சவப்பெட்டி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டது. அதை அரசு குடும்பத்தினர் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள் அதை நிர்வகிக்க இரண்டு நிறுவனங்கள் பொறுப்பேற்று இருந்தன.

30 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது. (1990–91) அதை உருவாக்கியவர் ஹென்றி ஸ்மித் அவர் வேறு நிறுவனத்துடன் இணைந்து விட்டதால் சரியான தேதி மட்டும் தெரியவில்லை. ஆனால் இரு நிறுவனங்கள் அரச குடும்பத்தின் சவப்பெட்டியை தம் பொறுப்பில் வைத்திருந்தன. இந்த இரு நிறுவனங்களும் அரசு குடும்பத்தில் யார் இறந்தாலும் நல்லடக்கத்திற்கு முழு பொறுப்பாக செயல்படுபவர்கள்.

இந்த சவப் பெட்டி சாதாரணப் பெட்டிகளை போல் அல்ல. இதில் உடல் வைக்கப்படும் மரப் பெட்டியில்(the innerwood layer எனப்படும்) உட்புறமாக ஈயம் பூசப்பட்டிருக்கும் . அதன் பிறகு இந்தப் பெட்டி மிகப்பெரிய ஓக் மரத்தால் செய்யப்பட்ட பெரிய பேழையில் வைத்து அடக்கம் செய்யப்படும். இந்த Two in one ரக பெட்டி அரச குடும்பத்தினருக்கே உரித்தான ஒன்று என்று கூறலாம். எனவே தான் சாதாரணமாக ஆறு பேர் சுமந்து செல்லும் சவப்பெட்டியை எட்டு பேர் சுமக்கும் அளவிற்கு இது கனமானதாக இருக்கும்.

இது குறித்த சிறு சிறு அம்சங்கள் கூட குறிப்பிட்ட வழிகாட்டுதலின் படியே மேற்கொள்ளப்பட்டிருக்கும்.

அதன் மீது வைக்கக்கூடிய அரசியின் அல்லது அரசரின் உடைமைகள் மன்னர் என்பதற்கான குறியீடுகள் மேலே போர்த்தக்கூடிய விரிப்பு என்று அனைத்தும் முறைப்படி பார்த்து செய்யப்படும். அரசர் அரசி இளவரசி இளவரசர் என்று பல குறியீடுகள் உண்டு.

அதன் மீது வைக்கக்கூடிய மலர் வளையத்தில் இருக்கும் மலர்கள்(ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் உண்டு கருணை அன்பு திறமை பலம் போன்றவற்றை குறிக்கும் மலர்கள்) முதல் மகுடம்,orb எனப்படும் கமண்டலம் மற்றும் செங்கோல் அனைத்தும் பொருத்தும் படியாக இந்த பெட்டியின் மேல் புறம் வடிவமைக்கப்படும். அந்தப் பெட்டிக்கான மரம் கூட அவர்களுக்கு சொந்தமான எஸ்டேட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு பெட்டி உருவாக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் மேற்கொள்ளப்படும் போது உடல் சிதையாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் இருந்தே அவருடைய விருப்பப்படி வழிமுறைகள் வகுக்கப்பட்டன.(மறைந்த அரசியின் பாட்டனார்)

இவ்வாறு வைக்கப்படும் உடல் ஒரு வருட காலத்துக்கு சிதையாமல் இருக்கும்.

ஈயம் பூசப்பட்டதால் காற்று வெளியே போகாமல் உடல் சிதையும் போது கூட பிணவாடை மற்றும் வாயு போன்றவை வெளிவிடப்படாமல் ஏர் டைட்டாக இருக்கும்.

உலகெங்கிலும் தலைவர்களுக்கு மரணம் ஏற்படும் போது இதுபோல் அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட எதிர்பாராத காலதாமதம் ஏற்படுமேயானால் எம்பாமிங் (பதனிடல்)செய்கிறார்கள். தொலைதூரத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்றாலும் இவ்வாறு செய்கிறார்கள் ராணுவ வீரர்கள் இருந்தாலும் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு முன் இதுபோல் செய்கிறார்கள்.

சாதாரண மனிதர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் உறவுகள் வந்து சேர ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு மேல் ஆகும் போது உடலை மார்கில் வைத்து பாதுகாக்கிறோம். இரண்டு மூன்று நாட்களுக்குள் அடக்கம்/எரியூட்டல் என்றால் ஃப்ரீசர் பாக்ஸ் போதும் வீட்டிலேயே வைத்துக் கொள்வது உண்டு. சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கேற்றபடி பேக் செய்ய வேண்டும். எம்பாமிங் செய்ய வேண்டும்.

அரச குடும்பத்தினரின் வழக்கம் அவ்வாறு மார்கில் வைப்பதோ எம்பாமிங் செய்வதோ கிடையாது. அதற்கு பதிலாக இவ்வாறு ஈயம் பூசப்பட்ட மரப் பெட்டியில் வைத்து மிகப் பெரிய பேழையில் பூட்டி வைத்து விடுகிறார்கள். இது காலம் காலமாக நிகழ்ந்து வருவது தான்.

இவ்வாறு செய்வதால் சுற்றிலும் இருப்பவர்களுக்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.




கருத்துகள்