'கூடு கெடின் மற்றோர் கூடு செய்வான் உளன்' என்ற திருமந்திரத்தின் பொருள் என்ன? அதை சரியென ஏற்கிறீர்களா? அது சாத்தியம் தானா?
எத்தனை அற்புதமான பாடல்
கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
பாடது நந்தி பரிசு அறிவார்க்கே
பொதுவாக இந்து மதம் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டது ஒரு பிறவி முடிந்த உடன் உயிர் பிரிந்து இன்னொரு உடலை எடுத்துக் கொள்ளும் என்பது ஒரு ஆழ்ந்த நம்பிக்கை.
அது அவர்களது வினைப் பயனுக்கு ஏற்ப புழு பூச்சி போன்ற தாழ்ந்த உயிரினமாகவும் மனித பிறவி போன்ற உயர்ந்த உயிரினமாகவும் பூமியில் பிறக்க வாய்ப்பு உள்ளது என்பதும் பொதுவான இந்து மத நம்பிக்கை.
இதுபோன்ற கருத்துக்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட
( அதாவது மரணத்திற்குப் பிறகு-உடலிருந்து உயிர் நீங்கிய பிறகு- உடல் மட்டும் அடக்கம் செய்யப்பட்டு, அவ்வாறு பிரிந்த உயிர், கண்ணுக்குத் தெரியாமல் இந்த பூமியில் எங்கோ சுற்றிக்கொண்டு ஏதோ ஒரு உடலில் மீண்டும் வந்து புதிய பிறவி எடுக்கும் என்ற கருத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்)
ஒப்புக்கொள்ளக்கூடிய செய்தி இதோ.
இந்து மதம் வலியுறுத்தக் கூடிய முக்கியமான கொள்கைகள் இரண்டு உள்ளன.
ஒன்று நன்னெறி( நல்லொழுக்கம்)
இரண்டாவது மெய் உணர்வு(இறை உணர்வு)
நன்னெறியில் ஒழுக வேண்டிய அவசியத்தை மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்படி உணரும் போது அவர்களுக்குப் புலப்படக்கூடிய மெய்ஞானம் மெய்யறிவு மெய் உணர்வு என்பதையே இறை உணர்வாக பார்க்கின்றனர் இந்த மகான்களும் ஞானிகளும்.
நல்லொழுக்கம் என்பதை பின்பற்றி வாழக்கூடிய ஒரு மனித வாழ்வில் மெய்யுணர்வு கைகூடும் மெய்ஞானம் கிட்டும் அதுவே இறை உணர்வு ஆகும் என்பதுவும் மதக் கோட்பாடு.
ஆனால் கலியுகத்தில் இன்று மனிதனுடைய மனம் சுற்றி நடக்கும் தவறான காரியங்களால் பாதிக்கப்படுகிறது. தவறான எண்ணங்கள் மேலோங்குகின்றன தவறான சிந்தனைகளால் ஞானிகள் வார்த்தைகளில் உண்மையான பொருள் கிடைப்பதில்லை.
இன்றைய மனிதர்களுக்கு எண்ணற்ற சந்தேகங்கள் எழுகின்றன கேள்விகள் பிறக்கின்றன, விடைகள் தேடி அலைகின்றார்கள்.
உடல் விட்டு உயிர் பிரிந்து வேறொரு உடலில் போகும் போது என்பதை நாம் நம்பவில்லை என்றாலும் வேறு விதமாக சிந்தித்துப் பார்த்தால் சில உண்மைகள் புலப்படும். மனித வாழ்க்கையை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். ஏற்ற இறக்கங்கள் இருக்கும்
நேற்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஊழியர்கள் கைகட்டி நமக்கு சேவகம் செய்து உணவு பரிமாறி இருப்பார்கள் இன்று வீடு திரும்பிய பிறகு தனியாக நாமே நமக்கு நாமே ஒவ்வொன்றாகப் பார்த்து செய்து கொண்டிருப்போம் நேற்று ராஜா போன்ற வாழ்க்கை இன்று ஒரு சாமானியனின் வாழ்க்கைக்குத் திரும்பியிருப்போம்.
வாழ்க்கையை நாம் எவ்வாறு அனுபவிக்கிறோம் என்பது தான் இந்த உயிர் கூடுவிட்டு கூடுமாறிப் போவது-
நேற்று குழந்தையாக
இன்று வாலிபனாக
பிறகு குடும்பத் தலைவனாக
தந்தையாக
ஒரு மாமனாராக
தாத்தாவாக
என்று பல பரிமாணங்கள் தோன்றலாம்;
சில காலங்கள் இனிமை மிகுந்ததாக, வசதிகள் மிகுந்ததாக மகிழ்ச்சிகரமானதாகவும் சில நாட்கள் துன்பமயமாகவும் துக்கம் மிகுதியாகவும் தாழ்ந்த நிலையிலும் இருக்கலாம
காரணத்தை ஆராய்ச்சி செய்த மனிதன் ஜாதக ரீதியாகவும் கோச்சார அடிப்படையிலும் முன்வினை பயன் என்றும் பலவிதமான கோணங்களில் சிந்தித்து பார்ப்பதுண்டு.
வாழ்க்கை தெளிந்த நீரோடை போல ஒரே மாதிரி ஓடாது.
ஆர்ப்பரிக்கும் நதியாக
அணைகளை உடைத்து செல்லும் பிரவாகமாக
அருவியாக
காடு மலை மேடு பள்ளம் தாண்டி ஓடி
ஒரு வழியாக கடலில் சங்கமிக்கும் ஆற்று நீராக
மீண்டும் ஆவியாகி மேலே சென்ற மேகமாகி மழை பொழியும் மழை நீராக நீரோடையாக அருவியாக ஆறாக மாறிக்கொண்டே இருக்கும்.
இந்தத் தொடர் நிகழ்வு தான் வாழ்க்கையின் சுழற்சி என்பதைத்தான் உடலிலிருந்து உயிர் பிரிந்து இன்னொரு உடல் நாடும் என்று கூறியிருக்கிறார் திருமூலர்.
இப்போது தவிர்க்கக்கூடாதது அறிவியல் ரீதியிலான சிந்தனை. தாய் தந்தையின் மரபணுக்கள் பிள்ளைகளுக்கு கடத்தப்படும் போது அந்த உயிரணுக்கள் அதாவது சந்ததிகளில் ஒரு தொடர் நிகழ்வாக தொடர்ந்து கொண்டிருக்கிறது அல்லவா? எங்கே இருக்கிறது இறப்பு என்பது?
அதனால்தான் சந்ததிகள் இல்லாதவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்று சாத்திரம் சொன்னது.
மறுபிறவி இல்லை என்றால் வாழ்க்கையின் இன்ப துன்பங்களும் முடிவுக்கு வந்து விட்டன என்று பொருள். இன்றைய வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பம் தானே அதிகமாக இருக்கிறது? இன்பம் என்பதெல்லாம் இன்பத்தை தேடி அலைவதே துன்பம் என்ற அளவில் தானே உள்ளது.
இன்பமும் வேண்டாம் துன்பமும் வேண்டாம் என்று சந்நியாசம் புகுவோர் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறார்கள், இருப்பார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக