நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்' (குறள் எண்:373) என்னதான் நன்றாக, அதிக அளவு படித்திருந்தாலும், விதிப்படி உள்ள அறிவு தான் உண்மையாக வெளிப்படும் எனும் போது எதற்காக படிக்க வேண்டும்? வள்ளுவர் கூறும் 'உண்மை அறிவு' எது?
தூங்காமணி விளக்கு ஆயினும் தூண்டுகோல் ஒன்று தேவை.
அந்த உண்மை அறிவு என்பது ஒளிர வேண்டுமானால் கல்வி அறிவு தேவை.
ஐயன் இதை மறுக்கவில்லை. உண்மை அறிவு என்பதன் முக்கியத்துவத்தை இவ்வாறு உயர்த்திக் கூறுகிறார். இது ஒரு அணி வகையாகும்.
சிறப்பான ஒன்றை உயர்த்திக் கூற இன்னொரு சிறப்பான விடயத்தை ஒப்பிட்டு அந்த இன்னொன்றை சற்றே தாழ்த்தி எடுத்துரைப்பது இந்த வகை அணி இலக்கணம்.
நுண்ணிய நூல் பல கற்பதை அவர் இந்த குறளிலும் உயர்த்தித்தான் கூறுகிறார்.
நூல் பல கற்றாலும் அவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்கிறோம் என்பது முக்கியம் அல்லவா ?
அந்த அடிப்படை அறிவு,அந்த அடிப்படை கிரகிக்கும் தன்மை, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் மனப்பான்மை, தீமையிலிருந்து நன்மையைப் பிரித்து உணரும் திறன்- இவையெல்லாம் இல்லாமல் கல்வி கற்றால், நூல்களை மட்டும் படித்தறிவதால் என்ன பயன் என்பதைத்தான் இந்தக் குறள் சுட்டிக்காட்டுகின்றது.
அவ்வாறு மேலோட்டமாக நூல் பல கற்பதைத் தான் ஏட்டு சுரைக்காய் என்றார்கள்.
வள்ளுவர் கூறும் உண்மை அறிவு என்பது என்ன?
உண்மை அறிவு என்பதை வரையறுக்க வேண்டுமானால்-
இயல்பாக அமைந்த சிந்திக்கும் திறன் என்று கூறலாம். நேரடியாக சிந்திப்பது, எதிர்மறையாக சிந்திப்பது எல்லாமே இதில் அடங்கும். எனவே அது சிறந்த வரையறை ஆகாது. உண்மை அறிவில் எதிர்மறை சிந்தனைகளை எதிர்கொள்ளும் நேர்மையான வழிமுறைகள் அடங்கியிருக்கும்.தவறான பாதையில் சென்றால் விளையக்கூடியா தீமைகள் தெளிவாகத்தெரியும்.
Controlled thoughts, causing regulated action expressed in good deeds, leading to great results என்று நான் வரையறை செய்ய விரும்புகிறேன்.
இன்னும் ஒரு படி அதிகமாக சென்று உயர்ந்த சிந்தனை என்று கூறுவேன்.
(வேற லெவல் சிந்தனை என்று கூட வைத்துக் கொள்ளலாம்) உண்மையில் உயர்ந்த ஒன்றைத் தான் வேற லெவல் என்று சொல்கிறோம். அது சரியான சொல்லாடலா என்பது வேறு பிரச்சினை. சிறந்த தமிழும் இல்லை, சிறந்த ஆங்கிலமும் இல்லை என்றாலும் மக்களுக்கு அது சென்றடைகிறது.
ஒருவன் தன்னைத்தானே பட்டை தீட்டிக் கொள்ளவும் செதுக்கி சிற்பம் ஆக்கிக் கொள்ளவும் உள்ளிருக்கும் உந்து சக்தி/ தேடல்/ அறிவு தாகம்/ வேட்கை காரணமாக தேடித் தேடி அலைந்து தேடியது கிடைத்ததும் அதை சரிவர உள்வாங்கிக் கொள்ளும் திறன், நன்மை எது, தீமை எது என்று பகுத்தறியும் பண்பு, அதை வாழ்வியலில் பொருத்திப் பார்க்கும் திறமை எல்லாம் அடிப்படையில் அமைந்திருக்கும். அதுவே உண்மை அறிவாகும்.
புடம் போட்ட தங்கம் தான் சொக்கத்தங்கம் ஆகிறது
பட்டை தீட்டிய வைரம் தான் ஜொலிக்கிறது
அதே நேரத்தில் அடி மீது அடி வைத்தாலும் அம்மி நகராது.
உயர உயரப் பிறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.
அடிப்படை அறிவு இல்லையேல் எந்த முயற்சியும் சிறக்காது.
நூல் பல கற்காமல் அடிப்படை அறிவு சிறந்த பலனைத் தாராது. நூல் பல கற்றாலும் அடிப்படை அறிவு இல்லையேல் பயனில்லை.
ஒன்றில்லாமல் மற்றொன்று சிறப்பதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக