அருள் அதனை ஈன்ற அன்பை விட மேலானது. அந்த அருளை பொருள் என்ற செவிலித்தாய் தான் வளர்க்க முடியும்' என்ற வள்ளுவரின் குறள் (757) சரிதானா? அருளை பொருள் எப்படி வளர்க்க முடியும்? விளக்குவீர்களா?n
செல்வச் செவிலியால் உண்டு
உண்மையான அன்பு என்பது ஒரு மென்மையான உணர்வு.
யாரிடம் அன்பு உருவாகிறதோ அந்த அன்புக்குரிய நபர் துன்பத்தில் இருக்கும்போது அல்லது கண்கலங்கி நிற்கும் போது இயல்பாகவே கருணை என்ற ஒன்று அவரிடத்தில் பிறக்கும். அது அன்பின் வெளிப்பாடு ஆகும்.
அன்பின் குழந்தையாக.கருணை பிறக்கிறது . அன்பு என்பதை விட அற்புதமான உணர்வு அபூர்வமானதும் கூட. அதுவே உண்மை அன்பின் வெளிப்பாடு.
அன்பு மகிழ்ச்சியைத் தரும் புன்னகை வரவழைக்கும் ஆனந்த நடனம் ஆடச் செய்யும். அதே நேரத்தில் அந்த அன்பினால் எழுந்த கருணை என்பது கண்ணீர் கசிய செய்யும் . மனம் கலங்கச் செய்யும்.. மனம் உருகி கண்ணீர் வழிந்து செய்வதறியாது தவிர்த்து பதைப்பதைப்புடன் படபடப்புடன் எந்த எல்லைக்கும் சென்று துயர் துடைக்கத் தூண்டும். அன்பிற்குறியவரின் வலி தீர வழி என்னவென்று அலைபாய்ந்து தேடித்தேடி அந்த துன்பத்தை தீர்க்கும் வரை போராடும். எனவே அன்பினால் பிறந்த கருணை அன்பை விட மேலானது.
இங்கே ஐயன் உரைப்பது சக உயிர்களிடத்தில் உருவாகும் அன்பு பற்றிய விளக்கம். மனித நேயம் என்று இன்று அறியப்படுவதாகும்.In the Wider perspective.
அன்பு கொள்ளக் காரணம் இல்லை. கருணை கொள்ள ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தினால் ஒரு காரியம் நடக்கிறது. அந்தக் கருணையே ஒரு காரியம் நிகழத் தூண்டுகிறது.அதுதான் உதவி. அது மன ஆறுதலாகவோ, உடல் உழைப்பாகவோ, பொருள் உதவியாகவோ இருக்கலாம்.
ஒருவர் இன்னொருவருக்குத் தரக்கூடிய மன ஆறுதல் என்பதற்கு விலை இல்லை. பார்வையற்ற ஒருவரைக் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று சாலையை கடக்க உதவினால் அது உடல் ரீதியான உதவி.
ஆதரவின்றி கிடக்கும் ஒரு முதியோருக்கு உடல் நலம் பெற மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்ப்பது என்றால் கட்டாயம் அதற்குத் தேவையான பொருளைக் கொடுத்து உதவ வேண்டும் அது பொருள் உதவி.
இந்த நிலையில் அன்பு மட்டும் போதாது ஆதரவுக் கரம் நீட்ட அந்தக் கருணை என்ற குழந்தையை வளர்க்க பொருள் என்ற செவிலித்தாயின் உதவி தேவைப்படுகிறது.
இங்கும் பொருள் பிரதானமானதாக இல்லை. அன்பு விலைமதிக்க முடியாதது அதிலிருந்து பிறக்கும் கருணை அற்புதமானது. அந்தக் கருணையையும் வெளிப்படுத்த செயல்படுத்த ஒரு செவிலித்தாய் போல பொருட்செல்வம் உதவுகிறது.
ஒன்றை உயர்த்த, இன்னொன்றை சற்றே தாழ்த்துவது போல உரைத்து அந்த ஒன்றின் உயர்வை விளக்கும் அணி இலக்கணம்.
சிறப்பான உவமை.
தமிழ்க் கடவுள் முருகனை ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தார்கள் என்பதுண்டு. அவர்கள் செவிலித்தாய்கள். பெற்றவள் மலைமகள் என்றாலும் வளர்த்தவர்களும் சிறப்பு பெறுகிறார்கள். அந்த ஆறுமுகனை வளர்க்க ஆறு பேர் துணை புரிந்தார்கள்.
இன்றைய வாழ்க்கையில் கூட குழந்தையை வளர்ப்பதற்கு இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது. அது பெற்ற தாயின் தாயாகவோ தந்தையின் தாயாகவோ கூட இருக்கலாம். யாரோ ஒரு அத்தைப்பாட்டியாக இருக்கலாம்.அவர்களும் செவிலித்தாய்போல் செயல் புரிந்து குழந்தையை சிறப்பாக வளர்ப்பார்கள். அந்த விதத்தில் அவர்களும் தாய்மார்களே.
இங்கே ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அது பெரும்பாலும் பொருளுதவியாகத்தான் இருக்கிறது. துயரத்தில் துன்பத்தில் வறுமையில் இயலாமையில் முதுமையில் பார்வை இழந்து தவிக்கும் ஒருவருக்கு உதவி செய்ய பொருள் தேவைப்படுகிறது.
இங்கே யானும் ஒரு உவமை உரைக்கின்றேன்.
இதோ இந்தப் படத்தை பார்ப்பவர்கள் உயிர்களிடத்தில் அன்பு கொண்டவர்கள் என்றால் முதலில் வருத்தப்படுவார்கள் பிறகு அந்த சிறுவனிடம் இரக்கம் பிறக்கும். ஆனால் அவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திற்கு அவர்களுக்கு பொருள் என்ற ஒரு செவிலித்தாய் தேவைப்படுகிறது அப்போதுதான் அன்புள்ளத்தில் பிறந்த அந்த கருணை என்ற சிறந்த குழந்தை செயல்பட முடியும்.
வாயில்லாத உயிரினமாகிய அந்த நாய்க்கு நான்கு கால்கள் அந்த வாயுள்ள மனிதப் பிறவிக்கு இரண்டு கால்களும் இல்லை. இருவருக்கும் சேர்த்து நான்கு கால்கள் தாம்.
- யாருக்கு யார் துணை?
- யாருக்கு யார் உதவி ?
- யாரிடம் யாருக்கு அன்பு?
- யாரிடம் யாருக்கு கருணை?
- இந்த இருவரில் யார் யாருக்கு உதவப் போகிறார்கள்?
- இவர்களின் எதிர்காலம் என்ன?
- இன்றளவும் உயிர் வாழ்கிறார்களா?
- இவர்களின் கதி என்னவாயிற்று ?
இந்தப் படத்தைக் காணக்கூடிய கோடான கோடி மக்கள் அன்புள்ளம் கொண்டவர்கள் என்றால் இவர்களிடம் இரக்கம் கொள்வார்கள். இவர்களுக்காக குரல் கொடுப்பார்கள். ஆனால் இவர்களுக்காக யார் உதவுவார்கள்? யார் உதவினார்கள் என்பது முக்கியமாகிறது.
சிறுவனுக்கு செயற்கைக் கால் பொருத்த வேண்டும் என்றால் அதற்கான பொருள் உதவி அவனுக்கு கிடைக்க வேண்டும் இங்கே அவனுக்கு தேவை பொருள் உதவி. அன்பும் கருணையும் மட்டும் இவர்களுக்கு உதவ முடியாது.
எனவே அந்தக் கருணை என்பது வளர்ந்து பலன் தர வேண்டும் என்றால் பொருள் என்ற ஒன்று முக்கியமான பங்கு வகிக்கிறது.இங்கே அந்த பொருள் என்ற செல்வ மகள் செவிலித்தாயாக செயல் புரிந்து உதவுகிறாள். அவளின் சேவை இங்கே தேவை.
ஐயன் இங்கே பொருட்செல்வத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துமுகத்தான் இவ்வாறு உரைக்கின்றார். அன்பின் முக்கியத்துவத்தையும் கருணை ஈகை இவற்றின் சிறப்பையும் ஐயனைப் போல் பகன்றவர் எவருளர்? எனவே, இங்கு பொருட்செல்வத்தின் முக்கியத்துவத்தையும் கூறுகிறார்.
செவிலியின் சேவையும் தேவை. நடைமுறை வாழ்க்கையையும் நன்குணர்ந்தவர் வள்ளுவப் பெருந்தகை.
கருத்துகள்
கருத்துரையிடுக