சிவனா ஆதியோகி?
ஆதியோகி என்பது ஒரு குறியீடு.
முதலில் சிவன் பற்றி… பிறகு ஆதியோகி பற்றி….
சிவன் குரு கிடையாது
மாணவனும் கிடையாது
அவன் யாருக்கும் மகனாக பிறக்கவில்லை அன்னையும் தந்தையும் அற்றவன் . (ஒரு தாயும் இல்லாதவன் தந்தையும் இல்லாதவன் என்று குறவஞ்சி பூடகமாகக் குறி சொல்வாள் மலை மகளுக்கு வரப் போகும் மணவாளன் குறித்த நாட்டியப்பாடல்)
ஆதியும் அந்தமும் அற்றவன்.அவனுக்கு துவக்கமும் முடிவும் கிடையாது.
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவன்
அவனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.
எப்படி காற்றை பார்க்க முடியாதோ அப்படி அவனையும் பார்க்க முடியாது. மூச்சுக்காற்றை உணர்வது போல அவனை உணர வேண்டும்.
ஆனால் அவன் யார்? அவனே இறைவன்.
அப்படி என்றால் இந்த ஆதியோகி யார்? புதுமுகம்?
அவர் யோகக்கலையின் முதல் குருவாக வல்லவா பார்க்கப்படுகிறார்?
5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் ரிக் வேதத்தில் யோகக் கலை முதன் முதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்று வழிபடும் சிவன் அந்த மெய்ஞானத்தை அடைந்து உலகத்துக்கு காட்டியதாக இந்து மதத்தில் புராணக் கதைகளில் காணலாம்.
அந்த குரு யார் என்ற கேள்வி எழும்போது சத்குரு ஒரு சில புராணக் கதைகளின் மூலம் விளக்குகிறார்.
ஆதி சிவன் என்பவர் இறைவன். ஆனால் ஆதி யோகி அவனில்லை
ஒரு சிறிய புராணக்கதை பார்க்கலாம்
ஆதியில் சிவன் என்பவன் தோன்றினான், அவன் பல மாறுபாடுகளின் கூட்டமைப்பு ஆவான்.
அவன் ஹிமாலயா மலைகளில் ஏறி பரவச நடனமும் ஆடுவான். ஆனந்த தாண்டவம் பின்னர் அதுவே அதிரடியாக ருத்ர தாண்டவமாக மாறும். எல்லையில்லாத ஆனந்தமே கட்டுக்கடங்காத சினமாக மாறும். பிறகு மௌன நிலைக்கு சென்று தவம் செய்வான். இப்படி புரியாத புதிராகவே இருந்து வந்தான்.
ஆர்வமிகுதியால் அவன் இருப்பிடம் தேடிக் கூட்டமாகச் சென்று அவனை அறிய விரும்பிய அல்லது உணர விரும்பிய, அவன் போல் ஆக விரும்பிய எண்ணற்ற மக்களில் ஏழு பேரை மட்டுமே தேர்ந்தெடுத்தான்.
ஆம். ஏழு பேருக்கு மட்டுமே அந்த இறைமையை உணரும் பாக்கியம் கிடைத்தது. .அவர்களுக்கு மெய்ஞானத்தை இறைவன் கொடுத்தான். அவர்கள்தான் அந்த சப்தரிஷி எனப்படும் ஏழு முனிவர்கள் . அந்த ஏழு பேரும் ஏழு திசைகளில் செல்ல இறைவன் தெற்கு நோக்கி நின்றுவழி காட்டியதாக அதன் பிறகு அவர்கள் மக்களிடையே சென்று தங்களுடைய இறை அனுபவத்தை பகிர்ந்ததாக கூறப்படுகிறது யோகா என்னும் கலையை வளர்த்தவர்கள் இந்த ஆதியோகிகள்.
இவர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட அத்தனை யோகிகளும் சேர்ந்தமைந்த ஒரு குறியீடாகவே இந்த ஆதியோகி என்ற சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது இது ஒரு குறியீடு மட்டுமே. இது குறிப்பாக எவரையும் கூறுவதாகச் சொல்ல முடியாது.
அன்று மலைகளிலும் நதியோரங்களிலும் அலைந்து திரிந்த மகரிஷிகள் யோகம் என்ற கலையை வளர்த்தவர்கள். அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் குறியீடாகவும் இந்த ஆதியோகி பார்க்கப்படுகிறது.
சிவனின் திருவுருவம் போலவே பிறைசூடி முடி தரித்து அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆதியோகி சிலை சத்குருவால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. இறைமையை தங்களுக்குள் உணர்ந்தவர்கள் யோகிகள் என்பதால் இறைவனின் உருவத்தையே இவருக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு உயிர் இனத்திலும் இறைவன் இருக்கின்றான் ஐந்தறிவு ஜீவனில் கூட அவன் உண்டு அதை அறியும் நிலையில் அவன் இல்லை என்பதுதான் மத போதனை.
சாமானியனுக்கு சிவனும் ஆதியோகியும் ஒன்றுதான்.
சத்குருவின் நோக்கம் யோக கலையை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் அதன் மூலம் இந்து மதத்தின் பெருமை கூற வேண்டும் என்பதே.
அதே நேரத்தில் பல மதங்களை இனங்களைச் சேர்ந்த உலகெங்கும் வாழும் மக்களை அவர் இந்த மையத்தில் ஒருங்கிணைத்து உலகளாவிய குறிக்கோளுடன் செயல்படுகிறார். காலத்திற்கேற்றவாறு மகா சிவராத்திரி விழாவை புதுப்பித்து சிறப்பு செய்திருக்கிறார் பாராட்ட வேண்டும். லேசர் ஷோ கண்ணைப் பறித்தது. சிந்தை கவர்ந்தது.
அவருடைய சமூக நடவடிக்கைகளும் அரசின் ஆதரவுடன் சிறப்பாக நடக்கிறது. இதில் அரசியல் எவ்வளவோ கலந்திருந்தாலும் சிறந்த செயல்பாடுகளுக்கு மதிப்பளித்து மக்களால் கொண்டாடப்படுகிறார்.
தமிழனின் அடையாளம் மொழி மறக்கப்படுவதாகவும் மறுக்கப்படுவதாகவும் ஒரு சில வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவனாக இறைவனே இல்லாதபோது மனிதன் அதுவும் பிரபலமாகி வரும் மனிதன் அவன் யோகியாக இருந்தாலும் குருவாக இருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாகியே தீர வேண்டும் என்பது விதி. எழுதப்படாத சட்டம்.
கருத்துகள்
கருத்துரையிடுக