பாம்பு பிடிப்பவர்கள் பெற்ற பத்ம விருது
பாம்பு பிடிப்பவர்களுக்கு பத்ம விருது தற்பொழுது வழங்கப்பட காரணம் என்ன? பாம்பு கடியிலிருந்து மனிதர்களை காப்பாற்றியவர்களுக்கு இதற்கு முன் இப்படிபட்ட விருது வழங்கப்பட்டிருக்கிறதா? ஏன் வழங்கப்படவில்லை
மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக பிற உயிரினங்கள் மாறுவது என்பது தடுக்கப்பட வேண்டிய ஒன்று. மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் அதே நேரத்தில் பிற உயிரினங்களும் அழிந்து விடாமல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனுக்கு பிற உயிரினங்களை அழிக்கும் உரிமை கிடையாது. மனித இனம் தொடர வேண்டும் என்றால் உயிரியல் வளங்கள் காப்பாற்றப்பட வேண்டும். உயிரினங்கள் அழிக்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்
உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு சிறிய இணைப்பும் காப்பாற்றப்பட வேண்டும்.பெருகி வரும் இந்த விழிப்புணர்வும் பாம்பு பிடிப்பவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கான ஒரு காரணமாக அமைகிறது.
பாம்பு கடியினால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க அந்த பாம்புகளை உயிரோடு பிடித்து காடுகளில் விடுவதற்காக வனவிலங்கு துறையினரிடம் ஒப்படைப்பது என்பது வழிகாட்டுதலாகும்.இந்தியாவில் பாம்பு கடித்து உயிரிழப்பவர்க்கள் ஆண்டு தவறு 60000 த்துக்கு குறையாமல் இருக்கிறது. காப்பீடு கூட எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தாக நிகழ்ந்திருந்தால் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் சில வருடங்களாக மட்டுமே . பொதுவாக மறுக்கப்பட்டு வந்தது. ஆபத்து இருப்பதைத் தெரிந்தே பாம்பு பிடிப்போர், விளையாட்டு, வீரம் காட்டுவது போன்றவற்றிற்கு மறுக்கப்படுகிறது.
பாம்பு கடி ஏற்பட்ட பிறகு உயிரிழப்பு நேராமல் தவிர்க்க அதற்கான மாற்று மருந்து விஷ முறிவுக்கான சீரம் கொடுக்கப்பட வேண்டும் அதையும் தயாரிப்பதில் வல்லுனர்கள் ஆகிய இந்த பாம்பு பிடிப்பவர்களின் சேவை இப்போதாவது உரிய அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்பது சிறப்பான செய்தி.
இந்த பாம்பு பிடிப்பவர்கள் இருளர் இனத்தைச் சார்ந்தவர்கள் . மலைவாழ் மக்களாகிய அவர்களுக்கு இயல்பாகவே அந்த திறமை இருக்கிறது. காடு மேடுகளில் மலைகளில் மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் கொடிய விலங்குகளை உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய விஷம் கொண்ட பாம்புகள் உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்களை எதிர்கொண்டு வாழும் மலைவாழ் மக்கள் இந்த இருளர்கள். இவர்கள் மலையில் கிடைக்கும் அற்புதமான மூலிகைகள் பாம்பு கடிக்கு மட்டுமின்றி பிற ஆபத்தான நோய்களிலிருந்து நிவாரணம் பெற மருத்துவ குணம் கொண்ட உயிர்காக்கும் தாவரங்களை நன்கு அறிந்தவர்கள். எந்த ஒரு கொடிய உயிரினம் தாக்கினாலும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்காக மூலிகை மருத்துவம் செய்து உயிர் வாழ்பவர்கள்.
இவர்களுடைய திறமையை வெளிநாடுகளில் இருப்பவர்கள் உணர்ந்து இங்கிருந்து மாசி சடையன் வடிவேல் கோபால் என்பவர்களை அழைத்துச் சென்று அயல்நாடுகளில் அச்சுறுத்தலாக விளங்கிய கொடிய விடமுள்ள பாம்புகளை உயிரோடு பிடித்துச் சென்று மக்களுக்கு உதவி இருக்கிறார்கள். பலருடைய உயிரை காப்பாற்றும் விதமாக இவர்கள் செயல் பட்டிருக்கிறார்கள். மக்கள் அச்சமின்றி வாழவும் இவர்களுடைய சேவையை அமெரிக்கா போன்ற நாடுகளும் பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது வியப்பு.
இந்த நிலையில் இவர்களுக்கு இந்தியாவிலும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் இவர்களுடைய உயிர் காக்கும் திறமையைப் போற்ற வேண்டும். இவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவர்களுடைய திறமையும் சேவையும் எப்போதும் மனித இனத்துக்குத் தேவை . இந்த காரணங்களுக்காக இவர்களுக்கு இப்போது சமூக சேவைக்கான பத்ம ஶ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இருளர் இனத்தைப் பற்றி கூற வேண்டும் என்றால் இவர்கள் பல நூற்றாண்டுகளாக துரதிஷ்டவசமாக ஒதுக்கப்பட்ட மக்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களின் மீது குற்ற வழக்குகள் எப்போதும் இருந்து வந்ததால் இவர்களுக்கு சமுதாயத்தில் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவே இல்லை. மலைகளில் இருந்து இறங்கி இவர்கள் வாழ ஆரம்பித்த போது மக்கள் இவர்களை அச்சத்தோடு பார்த்து ஒதுக்கி வைத்தார்கள் இவர்கள் வந்ததே கொலை களவு குற்றங்கள் செய்வதற்காக என்று ஒதுக்கினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த மக்களுக்காகவும் எவ்வளவோ சலுகைகளை அரசு அறிவித்த போதும் இவர்களுக்கு அவை சென்று சேர்வது சிரமமாகவே இருந்தது காரணம் இவர்கள் மீது சமுதாயம் குத்திய குற்ற முத்திரை. பல சந்தேகங்களின் காரணமாக இவர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்ள நேரிட்டது. சமுதாயம் தொடர்ந்து இவர்களை சந்தேக கண்ணோடு பார்த்ததால் காவல்துறையினர் இவர்களை கடுமையாக நடத்தினார்கள்.
எப்படி ஒவ்வொரு ஊரிலும் குற்றம் நடக்கும் இடம் என்று அந்த இடத்தையே மக்கள் தவிர்க்கிறார்களோ அதுபோல இந்த இனத்தையே மக்கள் தவிர்த்தார்கள். திருச்சி நகரத்தில் ராம்ஜி நகர் என்ற இடத்தில் ஒரு காலகட்டத்தில் கொள்ளைக்காரர்கள் தங்கி இருந்தார்கள் என்ற காரணத்திற்காக அந்தக் காலனிக்கே மக்கள் குடியேற அஞ்சினார்கள் வாடகை குறைந்தது. ராம்ஜி நகரிலிருந்து ஒருவன் வருகிறான் என்றாலே அவன் திருடன் என்ற அளவுக்கு மக்கள் வெறுத்தார்கள். கோவையில் சங்கனூர் பள்ளம் என்னும் கால்வாய் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு பயம் காரணமாக செருப்படி பள்ளம் என்று அழைக்கப்பட்டது. இப்போதும் இரவில் அங்கு செல்ல அச்சப்படுபவர்கள் உண்டு.(நீர் வறண்ட காலத்தில் கொள்ளையர் இருவர் சேறில் சிக்கிக்கொண்ட மக்களை செருப்புகளால் தாக்கியே கொள்ளையடித்த சம்பவம் நிகழ்ந்ததாம்) சந்தன கடத்தல் வீரப்பன் சுற்றித்திரிந்த சத்தியமங்கலம் என்ற ஊரைக் கேள்விப்பட்டாலே அச்சம் நிலவியது. இதுபோல ஒவ்வொரு ஊரிலும் ஒரு பகுதி கொள்ளையர்களின் பகுதியாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது உண்டு. இது போன்ற தேவையற்ற அச்சங்கள்(phobia )தாம் இருளர் சமுதாய மக்களை பிறர் ஒதுக்கி வைக்குமாறு செய்தன என்பது வருந்தத்தக்கது.
இவ்வாறாக மலைவாழ் மக்கள் என்றாலே கொள்ளைக்காரர்கள் என்ற அளவிற்கு இருளர் இன மக்களை இருட்டடிப்பு செய்து வைத்திருந்த காலம் மாறி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.1993 ல் புயல் போல வந்த வழக்கறிஞர் ஒருவர் பின்னாளில் நீதிபதி K சந்துரு அவர்கள் 96 ஆயிரம் வழக்குகளைத் தள்ளுபடி செய்து குற்றம் சாட்டப்பட்டிருந்த அப்பாவி இருளர் இன மக்களை வெளியே கொண்டு வந்தார். அன்றே அவர்களைச் சூழ்ந்திருந்த இருள் நீங்கி வெளிச்சத்திற்கு வந்தார்கள்
இதன் அடிப்படையில் தான் ஜெய் பீம் (டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்)திரைப்படம் கூட எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் கூட இந்த விழிப்புணர்வைத் தான் ஏற்படுத்தியது அந்த விழிப்புணர்வும் அரசு இவர்களை இப்போது அங்கீகரிக்க ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக