ஒரு தலை ராகம்.

டி ராஜேந்தரின் அற்புதமான படைப்புகளாக பார்க்கப்பட்டவை ஒரு தலை ராகம் ரயில் பயணங்களில் உயிர் உள்ளவரை உஷா...
குறிப்பாக ஒரு தலை ராகம் இளைஞர்களிடையே வரவேற்பை பெறக் காரணம் அதில் மாணவப் பருவத்தில் ஏற்படும் அற்புதமான உணர்வை அப்படியே திரைக்காவியமாக வடித்திருந்தது தான்.
கதாநாயகனுக்காக பெண்கள் அழுதார்கள்; நாயகியோடு சேர்ந்து அழுதார்கள். ஆண்கள் கிட்டார் வைத்துக் கொண்டு உருகி உருகி பாடிக்கொண்டிருந்தார்கள்.

டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த அனுபவத்தையே கதையாக வடித்து இருந்தார் இதைப்பற்றி நேர்காணல்களில் கூறியுள்ளார்.
இந்தப் படம் பார்த்த பிறகு தாடி வைத்துக்கொண்டு காதல் தோல்வியில் மாணவர்கள் துவண்டது உண்மை. மாணவிகளோ இழுத்துப் போர்த்திக் கொண்டு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தனர் . அது ட்ரெண்டிங் ஆகி இருந்தது.
ஜீன்ஸ் பாரலல்ஸ் ஹை ஹீல்ஸ் அணிந்த மாணவிகள் கூட சேலை அணிந்த நாட்களில் ஸ்டைலாக போர்த்திக் கொண்டு கைகளில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கல்லூரி செல்ல ஆரம்பித்தனர். ஆசிரியைகள் கூட அதேபோல போர்த்திக்கொண்டு பெரிய பொட்டு ஜிமிக்கி அணிந்து சென்றார்கள்.

உருகி உருகி நேசித்த ஒரு பெண்ணை அவளுடைய அடையாளம் வெளியே தெரிந்து விடாமல் கதையாக்கி இருந்தார்.

அன்றைய உலகம் சிறிது; அவர் வாழ்ந்த ஊர் சிறிது; அவர் பயணம் செய்த ரயில் இரு சிறு ஊர்களுக்கு இடையே ஒரு சிறிய குழுவினரையே சுமந்து சென்றது. காதலித்த பெண்ணின் பெயருக்குக் களங்கம் வரக்கூடாது என்ற அவருடைய சிந்தனையை அனைவரும் வியந்து பார்த்தனர்.

கூட பயணித்த மாணவியை ஒருதலையாக விரும்பிய அப்பழுக்கற்ற நேசம் பற்றிய அருமையான படைப்பு பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டது உண்மைதான். தனது குடும்ப சூழ்நிலை பின்னணி காரணமாக விருப்பத்தை சொல்லவும் முடியாமல் , சொல்லாமல் இருக்கவும் முடியாமல் அந்தப் பெண் தவித்த தவிப்பு பல பெண்களின் ஒட்டுமொத்த எண்ணங்களாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

என் கதையை எழுதி விட்டேன் முடிவினிலே சுபம் இல்லை (நாயகியின் பெயர் சுபத்ரா)

திரைக்கதையின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாணவ மாணவியர் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.

மென்மையான குணம் கொண்டவர்கள் தங்கள் காதலை இன்னும் ஆழமாக முன்னெடுத்ததில் ஆங்காங்கே கட்டாய திருமணங்களும் கௌரவ கொலைகளும் கூட நடந்து கொண்டுதான் இருந்தன.
குறிப்பாக இவருடைய படங்கள் மட்டுமே இதற்கெல்லாம் காரணம் என்று கூற முடியாது.
தேவதாஸ் போன்ற அமர காவியங்கள் திரை வடிவிலும் இலக்கிய வடிவிலும் புத்தக வடிவிலும் என்றுமே இளைஞர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.
அதன் விளைவாக கொலைகளும் தற்கொலைகளும் தமிழ் சமுதாயத்திலும் அன்றும் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. டி ராஜேந்தர் தான் முதன் முதலில் காதலைப்பற்றிக் கூறினார் என்று சொல்வதற்கு இல்லை ஆனால் அவருடைய படங்களில் காதலின் ஆழத்தைக் காட்டியிருந்தார்.

அன்றைய இளைஞர்கள் பலரையும் உண்மையான காதலை உணர வைத்தது இந்தப் படைப்புதான். இப்போது அந்த படத்தை பார்த்தால் பெரிதாக ஒன்றும் கவர்ச்சிகரமாக இருக்காது. ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அது புதிய அலைகளை உருவாக்கியது. அது ஆரம்பம்தான். அதன் அடிப்படையில் காதல் திரை காவியங்கள் ஓவியங்கள் பலவும் உருவாகின. அதுவரை அவ்வளவு அழகாக உண்மைக் காதலை இளைஞர்களை வைத்து காட்டவில்லை. குறிப்பாக மாணவர்களிடையே இந்தப் படைப்பு அந்தப் பாடல்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வார்த்தையும் அனைவரையும் சென்றடைந்தது. காணொளியில் இன்றும் பலர் கருத்துப் பகுதியில் உருகி உருகி இந்த பாடல்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறார்கள்

அதன் பிறகு டி ராஜேந்தர் அவர்களின் சொந்த வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன . வேறு ஒரு பெண்ணைத்  திருமணம் செய்து அவளுடன் அன்பாக வாழ்க்கை துவங்கியது. அவற்றையும் அவர் பின்னர் எடுத்த பல படங்களில் கூறியிருந்தார். இனி உயிருள்ளவரை உஷா தான் என்று தன் மனைவியின் பெயரை வைத்தே படம் செய்திருந்தார்.


இன்றைய குழந்தைகள் சிறு குழந்தை பருவத்தில் இருந்தே திரில்லர் க்ரைம் ஸ்டோரி பார்த்து பழகி விடுகிறார்கள். அவர்களுக்கு காதல் கதை எல்லாம் வேடிக்கையாக கூட இருக்கும். இருந்தாலும் எந்த காலகட்டத்திலும் அடிப்படையில் மனித மனம் உறவுகளை நாடும் என்பதில் ஐயமில்லை.

இன்றும் இதயங்களைப் பிழிந்து கண்கள் வழியே  அருவியாகக் கொட்ட வைக்கக்கூடிய பாடல்கள்.

என் கதை முடியும் நேரம் இது…

கருத்துகள்